Monday, December 13, 2010

வரலாற்று நோக்கில் வன்னியர்

வரலாற்று நோக்கில் வன்னியர்:

படையாச்சி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர்,
போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர்.வன்னியர்கள்
பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இந்த
கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி
செய்யப்பட்டது.

தோற்றம்:

வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக
கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது
பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள்
என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு
வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில்
பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர்
இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள்
அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள்
கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான
வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று
உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க
வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட
நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை
அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய
ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல்
அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த
ஒன்றாகும்.

--
ம. தெ. ஆறுமுகம்
காயாவது கனியாவதும்;
கல்ப் பொடிபட மணலாவதும்;
பேயா மழை பெய்வதும்;
பிழைத்தோரதில் உயிர் வாழ்வதும்;
உயிர்ப் போவதும் அது வருவதும்
உலக இயல்பே!...
http://shricaps.blogspot.com

Monday, December 6, 2010

கிணறு



மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.