Thursday, October 11, 2012

இறைவனின் மூச்சு..

உலகில் ஜெனிக்கும் உயிர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மூச்சுகளை
இறைவனிடமிருந்து வாங்கி வந்திருப்பதாகவும், அந்த மூச்சுகளை நாம் பூமியில்
செலவழிப்பதாகவும் இதனால் வேகமாய் மூச்சு விடுவோர் வேகமாய் இறைவனிடம்
திரும்பிவிடுவதாகவும் மெதுவாய் ஆற அமர மூச்சுவிடுவோர் இன்னும் கொஞ்சநாள்
கூட பூமியில் வாழ்வதாகவும் முன்னோர்கள் நம்பியிருக்கிறார்கள். இதற்கு
நாம் அத்தாட்சி வேண்டுமானால் விலங்குகளிடம் போகலாம். நிமிடத்திற்கு
நான்கு மூச்சுகள் மட்டுமே விடும் கடல் ஆமைகள் முன்னூறு ஆண்டுகள் வரை
உயிர்வாழ்கின்றன.ஆனால் குரங்குகள் நிமிடத்திற்கு 32 முறை மூச்சுவிட அதன்
ஆயுட்காலமோ அதிகமாய் போனால் 25 வருடங்கள் மட்டுமே.ஹம்மிங் பறவைகள்
நிமிடத்திற்கு 360 தடவைகள் மட்டுமே மூச்சுவிட அதன் அதிக பட்ச வாழ்நாட்கள்
3 ஆண்டுகளாக குறைந்துவிடுகின்றது.Shrews எனப்படும் நச்செலிகள் இன்னும்
பாவம், நிமிடத்திற்கு 660 தடவைகள் வேகமாக சுவாசித்து அதனை செலவழித்து
விடுவதால் அதன் ஆயுசுநாட்களோ 18 மாதங்கள் மட்டுமே.இப்படி இது ஒரு
நிரூபிக்கப்ப்ட்ட உண்மையாக இருக்கின்றது.இதைத் தான் ஆர்ட் ஆப் லிவிங்
கிளாசுகளில் பிரீதிங் எக்சசைஸ்சாக பயிற்றுவிக்கின்றார்கள். மெதுவாக
மூச்சுவிடு அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழலாமென்கின்றார்கள்.

இந்த மூச்சு சமாச்சாரம் எல்லா சமயங்களிலும் உயர்த்தி
பேசப்பட்டிருக்கின்றது. வாயைத் திறந்து இறைவனை
பாடவேண்டும்.போற்றவேண்டும்.ஓதவேண்டும் என்று சொன்னதெல்லாம் மறைமுகமாக
இந்த மூச்சு பயிற்சி செய்யவாக இருக்கலாம். பாடும்போது நம்மை அறியாமலே
நாம் மூச்சு பயிற்சி செய்கின்றோம். இந்து மதத்தில் பிராணயம் யோகாவெல்லாம்
இந்த மூச்சை சுற்றியியே வருகின்றது. கிறிஸ்தவ இஸ்லாமிய சமயங்களிலும்
முதல் மனிதனான ஆடம் நாசியில் இறைவன் காற்றால் ஊத அவனுக்கு உயிர்வந்தது
என்கின்றது.தமிழ் அறிவியல் கூட ஆக்சிஜனை பிராணவாயு அல்லது உயிர் வாயு
என்கின்றது.

உட்கார்ந்த இடத்திலிருந்தே உடற்பயிற்சி செய்யலாமென எட்டாம் வகுப்பில்
ஆசீர்மணி வாத்தியார் சொல்லிகொடுத்ததும் இதைத் தான். ஓடி ஆடி எல்லாம்
எக்சசைஸ் செய்ய வேண்டியதில்லை.ஆரோக்கியமான உணவும் நல்ல குடிநீரும்
சாப்பிட்டு மெதுவாக இந்த பிரீதிங் எக்சசைஸ் செய்தாலே இட் கவர்ஸ்
எவ்ரிதிங் என்பார். குகைகளிலும் குன்றுகளிலும் தீர்க்காயுசாக வாழும்
குருக்களும் யோகிகளும் ஜாகெர்ஸ் பார்க் போய் ஜாகிங்கா செய்கிறார்கள்.
எல்லாம் மூச்சுப் பயிற்சிதான். இதயச்சுவர்களையும், காற்றுப்பையின்
உந்துச்சக்தியையும் இரத்த ஓட்டத்தையும் அது பார்த்துக் கொள்ளும் என்பார்.
அப்படியே நாற்காலியில் நீண்டு நிமிர்ந்து அமர்ந்துகொள்.
மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, உன் காற்றுப்பையை முழுவதுமாக காற்றால் நிரப்பு.
காற்று நிரம்பிய நுரையீரலை அப்படியே மூச்சை அடக்கி பிடித்துக்கொள்.
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரமும் அடக்கி பிடித்துக்கொள்.
முடியவில்லை எனும் தருணம் வரும் போது மெதுவாக, மிக மெதுவாக்
உள்ளிருக்கும் காற்றை வெளியே ரிலீஸ் செய். ஒரு சொட்டும் இன்றி முழுதாக
அதை ரிலீஸ் செய்.
மீண்டும் மேற்சொன்ன படியே இன்னும் ஒருமுறை செய்.
அப்படியே இன்னும் எவ்வளவு முறை உன்னால் செய்ய முடியுமோ அவ்வளவு முறையும்
நீ செய். சீக்கிரத்தில் டயர்டாகிவிடுவாய். ஆனால் இதுதான் எளிய பெர்பெக்ட்
எக்சர்சைஸ் என்று சொல்லிக்கொடுத்தார். அவர் பாடப் புத்தகத்திலிருந்து
சொல்லிக்கொடுத்த பிற ஆயிரம் காரியங்களும் மறந்து போனாலும் ஆப்-டாபிக்காக
சொன்ன இந்த ஒரு காரியம் மட்டும் இன்னும் மறந்து போகவில்லை.I love
off-topics
--

Wednesday, August 29, 2012

கமுக்க வேலை...

கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம் என காலநிலைகளில் நான்கு பருவங்கள் இருப்பது போன்று வேலை கொடுப்போரும் வழக்கம் போல நான்கு நிலைகளில் தலைகளை சுத்திகரிக்கின்றார்கள் . முதலில் எழுத்து தேர்வு, பின்பு தொலைப்பேசி வழி சராமாரி கேள்விகள், அதிலும் தேறிவிட்டால் இறுதியாய் நேர்முகத் தேர்வு. நான்காவதாக எதாவது உங்கள் பேரில் கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றதாவென பார்க்க பேக்கிரவுண்ட் செக் மற்றும் போதை வஸ்துவுக்கு அடிமையாய் இருக்கின்றீர்களாவென பார்க்க டிரக் டெஸ்ட். இதையெல்லாம் தாண்டி வருவோரை தான் கன்கிராட்ஸ் என சொல்லி பெரும் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றார்கள். Kroll, Intellicorpபோன்ற நிறுவனங்கள் இந்த Background Screening Service வேலைகளை கமுக்கமாக அவர்களுக்காக செய்கின்றன. Drug test க்காக Lap corp அல்லது Quest Diagnostics போக வேண்டும். கிரான்பெர்ரி பழரசத்தை மடக் மடக் என குடித்திருந்தால் யூரின் Drug test-ஐ ஏமாற்றிவிடலாமென பரி முன்பு சொல்லியிருக்கின்றாள்.அது ஒரு நல்ல Natural Diuretic என்றாள். புரியவில்லை. தேவையும் இல்லை.

இதையெல்லாம் இங்கு சொல்லவந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஆளெடுக்கும் படலத்தினூடே இக்காலங்களில் புகுந்துவிட்ட இன்னொரு படிதான். ஓரளவு தேர்வாகி வருகின்ற நபர்களை இன்னும் முறமிட இணையத்தை பயன்படுத்துகின்றார்களாம். உதாரணத்துக்கு குறிப்பிட்ட நபரின் First name மற்றும் Last name-ஐ கூகிளில் தட்ட அது காட்டும் Myspace, Facebook, Linkedin, Blog, Forum பக்கங்களுக்கெல்லாம் சென்று இவரின் இணைய வாழ்வின் லட்சணத்தை அலசுகின்றார்களாம். அங்கு கண்டுபிடிக்கப்படும் இவர் பற்றிய அல்லது இவர் இட்ட தகவல்களும், வண்ணப் படங்களும் பெரிதும் இவரின் உண்மை முகத்தை எளிதில் காட்டுவதாக HR பெரிசுகளெல்லாம் சொல்லுதுகளாம். என் பெயரையும் முழுசாய் டைப்பி கூகிளில் தேடிப்பார்த்தேன் பெரிதாய் ஒன்றும் கிட்ட வில்லை. புனைபெயரை பயன்படுத்துவதில் இப்படி ஒரு லாபம். ஹாயாக கீழ்கண்ட சுட்டியில் இணையத்தில் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் (Fox News) பார்த்துக் கொண்டிருந்தேன். கோபாலோ டென்சனாய் கூகிளில் தன் பேரைத் தேடிக் கொண்டிருந்தான். கொஞ்சம் துப்புறவு தேவைப்படும் போலிருக்கின்றது. நாளைக்கு பொண்ணு கொடுக்கப்போகும் வீட்டுக்காரர்களும் மாப்பிள்ளை பேரை சும்மாவேனும் கூகிளில் தட்டி எதாவது விவகாரம் சிக்குதாவென தேடிப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb)



















நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

Tuesday, July 10, 2012

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும்.... பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!