Monday, January 25, 2010

ஸ்மார்ட் போன்கள்

தொலைவிலிருந்தும் நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால் செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள். இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும் சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

இந்த ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம் தாங்க முடிகிறதில்லை. இதைக்கொண்டு என்ன செய்யமுடியும் என்பதைவிட என்னசெய்ய முடியாது என்பதை கண்டுபிடிப்பதுதான் மிகக் கஷ்டம்.

முதலில் சுட்டெலி தேவையில்லை. அதாங்க கணிணி மவுஸ் தேவையில்லை. உங்கள் போனையே மவுசாக பயன்படுத்தலாம் என்றார்கள். அருமையாக வேலை செய்தது. முக்கியமாக டிவியில் மடிக்கணிணி திரையை பார்த்தபோது.
Mobile Air Mouse

இப்போது வீட்டிலிருக்கும் ரிமோட்டுகளையெல்லாம் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். எல்லா ரிமோட்டையும் உங்கள் கைப்பேசியே பார்த்துக் கொள்ளும் என்கின்றார்கள். டிவியில் சேனல் மாத்துறது முதல் DVR, DVD பிளயரையெல்லாம் கைப்பேசி கொண்டு இயக்கலாமாம்.
Redeye

போதாக்குறைக்கு கார் கீயையும் தொட்டுவிட்டார்கள். இந்த கைப்பேசி கொண்டே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம், ஆஃப்செய்யலாம், கதவை திறக்கலாம், பூட்டலாம். இப்படி நீள்கின்றது லிஸ்ட். அதுவும் எவ்வளவு தூரத்திலிருந்தும் செய்யலாமாம். எல்லாம் இணையம் வழி அல்லவா?
Viper Smartstart

இன்னொரு கும்பல் உங்கள் கைப்பேசி கேமராவில் நீங்கள் பிடிப்பவற்றை அப்படியே லைவ்வாக இணையத்தில் ஒளிபரப்பவும் வசதி செய்துதந்திருப்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
Ustream.tv

அது மட்டுமா, வீட்டிலிருக்கும் ஹீட்டரை அல்லது ஏர்கண்டிசனரை தூரத்திலிருந்தே உங்கள் கைப்பேசி வழியே கட்டுப்படுத்தவும் இப்போது வழிகொண்டு வந்திருக்கின்றார்கள். Ecobee

அப்படியே வீட்டிலிருக்கும் பாதுகாப்பு அலாரத்தையும் அறைவாரியாக ஆன் செய்ய அல்லது ஆஃப் செய்ய உங்கள் கைப்பேசி மட்டும் போதும். அதுவும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தே செய்யலாம்.
e-Secure

இப்படி இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகின்றது. இப்போதைக்கு மெத்தவசதியாக இவை கிடைக்காவிட்டாலும் இன்றைய கணிப்பேசிகள் போகும் போக்கை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடிகின்றது. கொஞ்சகாலத்தில் பெரும்பாலான எல்லா சின்ன சின்ன கொத்துச் சாவிகளையும் திறப்புகளையும் ரிமோட்டுகளையும் டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் கைப்பேசிகளே பார்த்துக்கொள்ளும் போலிருக்கின்றது.

சுவிச்சு போட்டா லைட்டெரிய வைக்கும் போன்ற சுவிட் தாயாரிப்பவர்களும் வேறுவேலை தேடவேண்டியிருக்கும். வீட்டு மின்விளக்கு கட்டுபாடுகளெல்லாம் 2013-ல் கைப்பேசியில் வந்துவிடுமே.சுவிட்ச் எதற்கு?

Wednesday, January 20, 2010

உயர உயரே

உச்சி வானத்தை எட்டும் படியாக கிமு காலத்திலேயே எழுப்பப்பட்டது "பர்ஜ் பாபில்". இந்த "பர்ஜ் பாபில்" டவர் கட்டப்பட்ட இடம் துபாயிலிருந்து ரொம்ப தொலைவிலில்லை.இந்த டவரிலிருந்து தான் பல மொழிகள் தோன்றியதாக கதை சொல்வார்கள். அப்படி பார்க்கப்போனால் ஈராக் தான் அனைத்து மொழிகளின் பிறப்பிடமும்.இதனால் தானோ என்னவோ யாஹூவும் தனது மொழிமாற்றி தளத்துக்கு பாபேல்பிஷ் என பெயர் வைத்தது. http://babelfish.yahoo.com

கடந்த 4ம் தியதி திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடத்தின் பெயர் "பர்ஜ் துபாய்" 2717 அடி அதாவது 828 மீட்டர் உயரம் கொண்டது.இதன் புதிய பெயர் பர்ஜ் கலீபா (Burj Khalifa) என்பதாம். எல்லா இடமும் ஒரே பெயர்மாற்றம் தான். சிக்காகோ வருபவர்களின் கவனத்திற்கு. சிக்காகோவின் புகழ்மிக்க சியர்ஸ் டவரின் பெயரையும் Willis Tower என மாற்றிவிட்டார்களாம். எல்லா இடமும் பெயர்மாற்றம் ரொம்ப முக்கியம் போலிருக்கின்றது. பர்ஜ் கலீபா டவரிலுள்ள சாளாரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபத்து நாலாயிரத்த்தை தாண்டுமாம். செலவு 1.5 பில்லியன்கள்.

கீழே நீங்கள் காணும் படங்கள் அங்கு போய் நான் எடுத்தவை அல்ல ஆயிரக்கணக்கான எண்ணிக்கை கொண்ட நமது தமிழ் வலைப்பூக்களில் ஏற்கனவே இப்படங்கள் வலம் வந்திருக்கலாம். சத்தியமாய் கட் அண்ட் பேஸ்ட் செய்தது தான். யார் எந்த படங்களை அல்லது எந்த தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார்கள் என டிராக் செய்வது இயலாத காரியம். எனக்கு பிடித்தவற்றை மறக்காமலிருக்கவும் பிற்பாடு ரெஃபர் செய்யவும் வசதியாக இங்கே சேமிக்கின்றேன். அவ்வளவே.

Tuesday, January 19, 2010

நெக்சஸ் vs ஐபோன்




காலம் மாற மாற காசும் கைமாறிக் கொண்டிருப்பது தவிர்க முடியாதது போல. கூடவே பயணித்தால் தப்பித்தோம். கொஞ்சம் களைத்தாலும் இன்னொருவர் கொத்திக் கொண்டு போய்விடுகின்றார், கொஞ்சகாலத்துக்கு முன்னர் வரை மெயின்பிரேம் முன்னுக்கு இருக்க அது IBM காலமாயிருந்தது. அதுவே வீட்டுக்கு வீடு மேஜை கணிணிகாலமாக மாற அதிஷ்டம் மைக்ரோசாப்ட் பக்கம் வந்தது. புதிய நூற்றாண்டு உதயமான சமயத்தில் இணையம் பக்கமாக ஜூரம் பிடித்ததால் அதிஷ்டகாற்று மைக்ரோசாப்டிடமிருந்து விலகி கூகிளிடம் வந்தது. இப்போது கூகிளின் சகாப்தமும் முடிந்து போனதோ என ஒரு சந்தேகம். காரணம் தற்போதைய டிரெண்ட் ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பியிருப்பதால் இந்த புதிய வருடம் ஸ்மார்ட்போன்களின் வருடமாக இருக்கலாமெனவும் அங்கே ராஜா எதுவோ அது தான் மொத்த மார்கெட்டுக்கும் ராஜாவென்பதால் எல்லாரும் ஸ்மார்ட் மொபைல்போன்கள் சந்தை பக்கம் திரும்பியிருக்கின்றார்கள். கூகிளும் தன் பங்குக்கு தனது புதிய ஸ்மார்ட்போனான நெக்சஸ் ஒன் (Nexus One)-னை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. "அடுத்த முதல் நாங்கள் தான்" என்கின்றது அப்பெயர். ஐபோனுக்கு சரியான போட்டியாக இறங்கியிருக்கும் இது இப்போதைக்கு வெல்லும் நிலையில் இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இன்னும் போராடலாம்.

நெக்சஸ் ஒன் பற்றிய சில குறும் தகவல்கள் இப்போதைக்கு தெரிஞ்சுக்க.
இதை கூகிள் டிசைன் செய்திருந்தாலும் இதை தயாரித்திருப்பது ஏற்கனவே HTC Magic போன்ற அட்டகாசமான போன்களை அளித்திருக்கும் HTC நிறுவனம். High Tech Computer Corporation என்பதின் சுருக்கமே HTC. தைவான் சொந்த ஊர்.
ஐபோனை விட அதிக திரைத்தரம் கொண்டது இது 480x800 பிக்சல்கள். ஐபோன் 320x480 பிக்சல்கள் மட்டுமே. அதுவே கலக்கலாயிருக்கும்.
ஐபோனை விட தொடுதிரை கொஞ்சம் பெரியதாம் 3.7 அங்குலங்கள். ஐபோன் 3.5 அங்குலங்கள் மட்டுமே
மாற்றும் வசதிகொண்ட பேட்டரி உள்ளது ஒரு பிளஸ் பாயிண்ட்.
LED பிளாஷ் வசதிகொண்ட கேமராவும் உண்டு.
அனிமேட்டட் பின்திரை வச்சுக்கலாம்.
YouTube, Picasa, Facebook போன்றவற்றில் நேரடியாக வீடியோ அல்லது ஒளிப் படங்களை ஏற்றம் செய்யலாம்.
இப்போதைக்கு அதிக பட்சமாக 32 கிகாபைட் மெமர்கார்டு வைத்துக்கொள்ள முடியும். அது வருவதோ 4 கிகாபைட் மெமரிகார்டோடு.
இந்த நெக்சஸ் ஒன்னில் மிகப் பெரிய பாதகங்களாக எனக்கு தெரிவது
மல்டி டச் எனப்படும் பல விரல் தொடுகைகளை கண்டுபிடிக்கும் திரை இதில் இல்லாதது. இது கொஞ்சம் தொல்லையாகவே இருக்கும். படங்களை அல்லது பக்கங்களை பெரிது படுத்தி பார்க்க கஷ்டபடவேண்டியிருக்கும்.
அதிக பட்சமாக வெறும் 190 மெகாபைட்டுகள் மட்டுமே இறக்கம் செய்யப்படும் பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இன்னொரு பெரிய குறை.
ரிங்கரை அணைக்க வெளி பொத்தான் ஒன்றும் இல்லாததால் அது ரிங்செய்யும் போது அவசரமாய் அதை குறைக்க அல்லது அணைக்க தொடுதிரையை தான் தடவவேண்டியிருக்கும்.
இப்போதைக்கு G.S.M பதிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
Nexus one Home
http://www.google.com/phone
Google App Store
http://www.android.com/market/
புதிதாக ஒரு போன் வாங்க கோபால் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். ஐபோன், பிளாக்பெர்ரி, HTC வரிசையில் இப்போது நெக்சசும் சேர்ந்திருக்கின்றது. எதை வாங்குகிறானோ தெரியவில்லை. கீழேயுள்ள வாக்கியத்தில் அவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.